அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர் மதியம் சத்துணவு சாப்பிடவும் ஏற்பாடு ஈரோடு, ஜுன்.16- ஈரோடு மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் தனது மகளை தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பில் சேர்த்தார். ஏழை குழந்தைகளுக்காக மதியம் வழங்கப்படும் சத்துணவை மகள் சாப்பிடவும் அவர் ஏற்பாடு செய்து இருக்கிறார். பள்ளிக்கூடம் திறந்தது ஈரோடு, குமலன் குட்டை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் நேற்று காலை அந்த பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் புதிய உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தனர். காலை இறைவணக்கம் முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, மாணவர் சேர்க்கைப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். மகளை சேர்க்க வந்த கலெக்டர் அப்போது அந்த பள்ளிக்கூடத்தை நோக்கி மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் வந்து கொண்டு இருந்தார். மாவட்ட கலெக்டர் காலை நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதை பார்த்ததும், ஆசிரியைகளும், பெற்றோர்களும் திடீர் சோதனைக்காக வந்திருக்கலாம் என்று கருதி, பரபரப்புடன் அவரை வரவேற்றனர். அப்போதுதான் அவருடன் கலெக்டரின் மனைவி ஸ்ரீவித்யா, 7 வயது மகள் கோபிகா ஆகியோரும் வந்திருப்பதை அறிந்தனர். தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக வந்திருப்பதாக கலெக்டர் கூறியதும், அதை நம்ப முடியாமல் அவர்கள் திகைத்து நின்றனர். பெற்றோர் அமரும் பெஞ்சில் பின்னர் சுதாரித்துக்கொண்ட தலைமை ஆசிரியை ராணியும், தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழியும் கலெக்டரை தலைமை ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமரச் சொன்னதற்கு மறுத்த கலெக்டர், புதிய மாணவிகளை சேர்ப்பதற்காக வந்த பெற்றோர் அமர்ந்திருந்த பெஞ்சில் அமர்ந்தார். சீருடை-மதிய உணவு பிறகு தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் தமிழ் வழி கல்வியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியையிடம் வழங்கினார். முறைப்படி 2-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டதும், கலெக்டர் அனந்தகுமார் கோபிகாவை மற்ற மாணவர்-மாணவிகளுடன் வகுப்பில் அமரவைத்தார். தனது மகளுக்கும் மற்ற மாணவர்களைப் போல் பள்ளியில் சத்துணவு மற்றும் சீருடை வழங்குவதற்கும் கலெக்டர் ஏற்பாடு செய்துவிட்டு கலெக்டர் அனந்தகுமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பள்ளியின் புரவலர் திட்டத்தில் கலெக்டரும், அவருடைய மனைவியும் தங்களை இணைத்துக்கொண்டனர். பெற்றோர் வியப்பு சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட, தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்க வேண்டும் என்ற மோகம் அதிகரித்துள்ள இந்த காலத்தில், மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்து இருப்பது, அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. மகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து உள்ளது குறித்து கலெக்டர் அனந்தகுமாரிடம் கேட்டபோது, இது தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று அவர் பதில் அளித்தார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள சம்பத் நகரில் கலெக்டரின் பங்களா அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 1/2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தொடக்கப்பள்ளி உள்ளது. கலெக்டர் அனந்தகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பல்லடம் வதம்பசேரி ஆகும். இவர் கால்நடைத்துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். 2003-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அவர், கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். புதிய அரசு அமைந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டார். கலெக்டரின் மகள் கோபிகா, தர்மபுரியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஆண்டு 1-ம் வகுப்பு படித்தவர்.
http://dailythanthi.com/article.asp?NewsID=653531&disdate=6/16/2011
Tagged: கல்வி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
கல்வி கற்கும் உரிமைக்கு எதிராக போராட அழைக்கும் ஒரு பள்ளி
ஏகப்பட்ட ஓட்டைகளுடன் ஒரு சட்டம்.
அப்படியே வலுக்கட்டாயமாக வறிய மாணவர்களைச் சேர்த்தாலும், பள்ளி – ஆசிரியர்கள் – மற்ற மாணவர்கள் பாரபட்சமாக நடத்தக்கூடும். இதை உணரவோ எதிர்க்கவோ மாணவர்களுக்குப் பக்குவமும் பெற்றோர்களுக்கு வலுவும் இருக்காது. இலவச இடம் தரும் பொறியியல் கல்லூரிகள் கூட எல்லா வகைகளிலும் காசைக் கறக்கப் பார்க்கின்றன. எனவே சத்துணவு, மற்ற உதவிகள் கூடிய முழுக்க இலவசமான கல்வி சாத்தியப்படாது என்றுநினைக்கிறேன்.
// தனியார் கல்விக்கூடங்களில் இலவசமாக கற்றுக்கொள்ள வழி செய்து விட்டோமே என்று அரசு பள்ளிகளை புதிதாக திறக்காமல், ஏற்கனவே இருக்கும் பள்ளிகளுக்கு படிப்படியாக மூடுவிழா நடத்துவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கிறதா ??//
நியாயமான அச்சம்.
கூடுதல் தரம், எண்ணிக்கையிலான அரசு பள்ளிகளே தேவை.
கட்டாய மருத்துவச் சட்டம் என்று முழுக்க இலவசமான மருத்துவம் அளிக்கச் சொன்னால் தனியார் மருத்துவமனைகள் ஏற்றுக் கொள்ளுமா? அரசே காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதால் தான், தனியார் மருத்துவமனைகள் ஏழைகளை வரவேற்கின்றன. இதுவே கூட பிற்காலத்தில் பொது மருத்துவத் துறையை வலுவிழக்கச் செய்யும் என்னும் போது, “தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தந்தோம்” என்று விளம்பரப்படுத்தி அரசு தன் பொறுப்பில் இருந்து விலகப் பார்ப்பதாகவே தோன்றுகிறது.
-
ரவி
அரசுப் பள்ளிக் கல்வி / தாய்மொழி வழிக்கல்வி பற்றி உரையாடல் வரும் போதெல்லாம் செயமோகனின் தேர்வு என்ற இடுகையை மேற்கோளாகச் சுட்டுகிறேன். http://www.jeyamohan.in/?p=488 . படித்துப் பல மாதங்கள், ஆண்டுகள் ஆன பின்னும் மறக்க முடியாத ஒரு சில தமிழ் வலைப்பதிவு இடுகைகளில் இதுவும் ஒன்று.
வீட்டுக்கு அருகில் தரமான தாய்மொழிக் கல்வியைத் தரும் தனியார் பள்ளிகளை விரல்விட்டு எண்ணி விடலாம் என்பதால் தாய்மொழிக் கல்வி என்றாலே அரசுப் பள்ளிகளையே பெரிதும் நாடும் நிலை உள்ளது.
அரசுப் பள்ளிகள் ஒரு பொதுத் திட்டம் என்பதால் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாகத் தீவிரமாக ஈடுபட்டு பள்ளியின் தரத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு. இப்படி தரமான பள்ளிகளைக் கொண்டுள்ள ஊர்களைத் தரும். அதே வேளை இந்தச் செயற்பாட்டுக்கு உகந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், சக பெற்றோர்கள் வாய்க்கப்பெற வேண்டும். நிறைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட வேண்டி வரும். இதைச் செலவிட இயலாமல் வெறுமனே பள்ளியின் தரத்தைக் குறை கூறுவது சரியாக இருக்காது.
-
புருனோ
ரவி
அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு பேரூந்து, அரசு வங்கி, அரசு தபால் ஆகியவற்றின் நோக்கம் வேறு . . . .. அதை தனியாருடன் ஒப்பிட்டால் நாளடைவில் அவை அந்த நோக்கத்திலிருந்து விலகிப்போய்விடும் . . . . அரசு வங்கிகள் தனியார் வங்கிகளுடன் போட்டி போட்டதன் விளைவு, கடந்த 20 ஆண்டுகளாக கிராமங்களில் துவக்கப்பட்ட கிளைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்
-
புருனோ
நான் கூறுவதை படித்தவுடன் உடனடியாக உங்களுக்கு கோபம் வரலாம், ஆனால் யோசித்து பாருங்கள் . . . . . முதல்வர் தனி சீருந்தில் கோட்டைக்கு வராமல் அரசு பேரூந்தில் வந்தால் பொது மக்களுக்கு நல்லதா, கெட்டதா
-
புருனோ
அரசு நிறுவனங்களை இரண்டாக பிரிக்க வேண்டும். ஒன்று லாப நோக்கில் நடத்தப்படுபவை (உதாரணம் டாஸ்மாக், எல்காட்) இரண்டு, அடித்தள மக்களுக்காக நடத்தப்படுபவை – உதாரணம் – அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு பேரூந்து, அரசு வங்கி, அரசு தபால் . . .. . இதில் இரண்டாவது பிரிவு என்பது தனியார் தரத்தில் இருக்காது . . .. அப்படி இருக்க வேண்டும் என்று முயற்சிப்பது தவறு என்பது என் கருத்து . . . .. உதாரணமாக சென்னையில் ஓடும் அரசு குளிர்பதன மிதவை பேரூந்துகள் . . . ..அப்படி ஒரு பேரூந்து வாங்கி ஓட்டும் காசில் (மும்மடங்கு கட்டணம்) சாதாரண பேரூந்துகள் இரண்டை வாங்கி ஓட்டினால் சராசரி குடிமகன் வசதியாக நெரிசல் குறைவாக பயணிக்கலாம்
-
ரவி
சரி புருனோ, தனியார் துறையுடன் ஒப்பிட வேண்டாம். ஆனால், அரசு மருத்துவத் துறையின் தரம் உயர்ந்துள்ளதாக நீங்கள் கூறும் அளவாவது அரசுக் கல்வித் துறையின் தரம் உயர்ந்து உள்ளதா? இல்லை எனில் ஏன்? அடித்தட்டு மக்களுக்காக மட்டும் ஏதோ ஒரு தரத்தில் அரசுக் கல்வி என்பதை வரவேற்க இயலாது. சமூகம் முழுக்க ஒரே தரமான அரசுக் கல்வி தருவதன் மூலமே சமச்சீரான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும். எனவே அரசு போக்குவரத்து, அரசு மருத்துவம் ஆகியவற்றைக் காட்டிலும் கூடுதல் முக்கியத்துவத்தை அரசுக் கல்விக்குத் தருவது நன்று.
-
புருனோ
ரவி, நீங்கள் தனியார் துறையுடன் ஒப்பிடாமல் பாருங்கள் . . . எவ்வளவு வளர்ச்சி என்று புரியும் . . .அதைத்தான் தான் சொன்னேன் . . . ..take away that distraction . . .. இது (இந்த வளர்ச்சி) போதுமா என்று கேட்டீர்கள் என்றால் பதில் . . .கண்டிப்பாக போதாது . . . . மேலும் வளரவேண்டும் . . . . ஆனால் அரசு பள்ளிகளை ஆராயும் போது தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது என் கருத்து
-
புருனோ
//கூடுதல் முக்கியத்துவத்தை அரசுக் கல்விக்குத் தருவது நன்று.// வழிமொழிகிறென்
-
-
-
புருனோ
-
ரவி
புருனோ, தனியார் கல்வியின் தேவையற்ற சொகுசுகளை பொதுக் கல்வியில் எதிர்பார்க்கவில்லை. எனினும், கழிவறை, நூலகம், கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள், மாணவர் எண்ணிக்கைக்குத் தகுந்த விகிதத்தில் ஆசிரியர்கள், முறையாக பாடம் கற்பித்தல் போன்றவையே பொது மக்கள் எதிர்பார்ப்பவை. பொதுக் கல்வியின் முன்னேற்றத்தை தனியார் கல்வித் துறையுடன் ஒப்பிடக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை பணம் உள்ளோர் தனியாருக்குப் போகலாம், பணம் இல்லாதோருக்கான பொதுக் கல்வி கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேறும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி பணம் கொடுத்தும் தனியாரில் தரமான, சமச்சீரான கல்வி ( வெறும் மதிப்பெண் பெறும் எந்திரங்கள் தேவை இல்லை ) கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் எந்தப் பள்ளியில் பிள்ளையைச் சேர்ப்பது என்பதே கேள்வி.
-
புருனோ
//பொதுக் கல்வியின் முன்னேற்றத்தை தனியார் கல்வித் துறையுடன் ஒப்பிடக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.//
அப்பாடா -
புருனோ
//அதே வேளை பணம் உள்ளோர் தனியாருக்குப் போகலாம், பணம் இல்லாதோருக்கான பொதுக் கல்வி கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேறும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.// ரவி, இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது . . . ஏற்றுக்கொண்டால் அதுவே நடைமுறையாகிவிடும் . . . . ஆனாலும் . . . . .. ம்ம்ம் . . .
-
புருனோ
-
-
-
-
ரவி
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சில மெட்ரிக் பள்ளிகள் CBSE முறை பாடத்திட்டத்துக்கு மாறத் தொடங்கி உள்ளன போலும். பையனைத் தொடர்ந்து சமச்சீர் கல்வியில் பயிற்றுவிக்கலாமா இல்லை CBSEக்கு மாற்றலாமா என்று உறவினர் ஒருவர் ஆலோசனை கேட்டார்.
கவலைக்கான காரணங்கள்:
1. சமச்சீர் கல்வியில் பாட அளவு (!) குறைவாக உள்ளது. இதனால் அறிவு குறையுமா, மற்ற மாணவர்களுடன் பிற்காலத்தில் போட்டி போட முடியுமா?
2. தொடர்ந்து இந்தி படிக்க முடியுமா?
3. ஒரே பள்ளியில் சமச்சீர், CBSE இரண்டு முறைகளும் இருந்தால் CBSE முறைக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏற்கனவே மாநில அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அதிக கவனிப்பின்றி வளர்கிறார்கள். எனவே, சமச்சீர் கல்வியில் பயில்வதனால் பையனக்குத் தகாத பழக்கங்கள் வருமா?
4. கூடப் படிக்கிற பிள்ளைகள் அனைவரும் CBSEக்கு மாறுகிறார்கள். அவர்களோடு இவனும் மாறினால் பழகிய நண்பர்களோடே தொடரலாம்.
பையன் படிக்கப் போவதோ நான்காம் வகுப்பு தான் !
எனது பதில்கள்:
1. இருக்கிற பாடத்தின் அளவு கடுமையாக இருப்பதால் தான் குழு அமைத்து ஆய்வு செய்து சுமையைக் குறைத்து எளிமையாக்கி உள்ளார்கள். அதிக பக்கங்கள் படித்தால் தான் அறிவு என்று எண்ணுவது தவறு. இப்போதைக்கு அவன் நன்றாக விளையாடி, மகிழ்ச்சியாகப் படித்தாலே போதுமானது.
2. இந்தியைத் தனியாகக் கூடப் படித்துக் கொள்ளலாம். பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்றில்லை. (இந்தி தேவையே இல்லை என்று கூட விளக்கலாம். ஆனால், புரிந்து கொள்ளும் மக்கள் குறைவு)
3. பள்ளியில் போதிய கவனம் செலுத்தவில்லை, நட்புகள் சரியில்லை என்றால் வேறு பள்ளி மாற்றலாம். அது கூட சமச்சீர் கல்வியையே நன்றாகப் பயிற்றுவித்து நல்ல பழக்கங்களை உருவாக்குகிற பள்ளிக்கு மாற்றலாம். இதற்காகப் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டாம்.
4. பள்ளிக்கூடம் மாறி, ஊர் மாறி எத்தனையோ புதிய நட்புகளைப் பெறுவதும் இருக்கிற நட்புகளைத் தொலைப்பதும் வாழ்க்கையின் போக்கு. இதற்கு எல்லாம் கவலைப்படக்கூடாது
கடைசியில் CBSE முறையில் இப்போது உள்ளதை விட மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள் என்பதால் சமச்சீர் கல்வியிலேயே தொடர முடிவு !
-
RAVIKUMAR
NICE
-
-
கார்த்திக்
இந்த பள்ளியில் தமிழ் விக்கி பயன்படுத்துகிறார்களாம். மாணவர்களுக்கு ஈ-கலப்பை பயன் படுத்த தெரியுமாம்.
-
ரவி
நன்றி கார்த்திக். இது குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் உரையாடியுள்ளோம். பள்ளி தலைமை ஆசிரியரிடமும் பேசினேன். விவரங்களுக்கு http://bit.ly/3DDraO பார்க்கவும்.
-
-
ரவி
பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் “Pre-KG interview” விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி முதல்வராக நடிப்பவள் தங்கள் பள்ளி நீச்சல், மொழி வகுப்புகள், மற்ற பல வசதிகள் செய்து தருவதால் ஆண்டுக்கு எத்தனை ஆயிரம் கூடுதல் கட்டணம், முன்பணமாக சில இலட்சம் கட்ட வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருக்கிறாள்.
கொஞ்ச நாள் முன்பு “மானாட மயிலாட” விளையாட்டில் ஒருத்தி Namitha Mamஆக நடித்துக் கொண்டிருந்தாள்.
**
எனக்கு சிறு வயதில் கொட்டாங்குச்சி வைத்து அண்ணாச்சி கடை விளையாட்டு விளையாடியது நினைவில் வந்து சென்றது. -
ரவி
http://domesticatedonion.net/tamil/2009/07/04/பள்ளிக்-குழந்தைகள்-வேலை
இடுகையை முன்வைத்து:
அரசு பள்ளி மாணவர்களை கழிவறை கழுவுதல் உள்ளிட்ட பணிகளில் “கட்டாயமாக” ஈடுபடுத்துவது அவர்களுக்கு சமூக அக்கறை சொல்லித் தருவதற்காக அல்ல.
அரசு நிதி ஒதுக்காததால் மாணவர்களைக் கொண்டு அவர்கள் விருப்பத்துக்கு மாறாக இலவச வேலை வாங்கிக் கொள்கிறார்கள். இதுவும் குழந்தைத் தொழிலாளர் முறை போலத் தான். இதை நியாயப்படுத்துவது தவறு.
மாணவர்களுக்கு வழிகாட்டியாக என்றாவது ஆசிரியர்களும் சேர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபடுகிறார்களா? தங்கள் கழிவறையைத் தாங்களாவது கழுவிக் கொள்கிறார்களா? மாணவன் கழிவறை வசதி இன்றி பொட்டலில் கழிக்க, ஆசிரியர்கள் தங்கள் கழிவறையைக் கூட மாணவர்களை விட்டுக் கழுவச் சொல்வதற்கு பேர் சமூகப் பயிற்சியா? நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியருக்கு தேநீர், cigarette, பாக்கு வாங்கி வர பாட நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறோம். இது இன்றும் பல பள்ளிகளில் தொடர்கிறது. இது ஆசிரியர்களின் எல்லா பணிவிடைகளையும் செய்து தரும் குருகுல முறை தான். இதன் தொடர்ச்சி தான் சில முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களைக் கூட அவர்களின் ஆய்வு வழிகாட்டிப் “பேராசிரியர்கள்” காய்கறி வாங்கவும், மின்சாரக் கட்டணம் கட்ட அனுப்புவதுமாகத் தொடர்கிறது.
காசு வாங்கிக் கொண்டு கல்வி விற்கும் தமிழ்நாட்டுத் தனியார் பள்ளியில் இது போல் தினம் கழிவறை கழுவ விட்டால் பெற்றோர்கள் ஒப்புக் கொள்வார்களா? காசில்லாத ஏழை அரசு பள்ளி மாணவனுக்கு மட்டும் இது எப்படி சமூகப் பயிற்சி ஆகும்?
மாணவர்களுக்கு சமூக அக்கறை சொல்லித் தர சாரணர் படை, தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம், NSS போன்ற அமைப்புகள் உள்ளன. அதன் மூலம் பக்கத்து ஊர்களில் பள்ளியில் சிறு சிறு பணிகளில் ஈடுபடுத்தலாம்.எந்த வேலையும் இழிவல்ல. கழிவறை கழுவதலையும் கூட மாணவர்களின் கோடை முகாம்களில் ஒரு பயிற்சியாகத் தரலாம். இதன் மூலம் உடலுழைப்புத் தொழிலின் சிரமத்தை, மதிப்பை மாணவர்கள் உணர்வார்கள். ஆனால், அந்தந்த வேலைக்கு ஆள் போடாமல் குழந்தைகளை இவற்றில் தினம் தினம் ஈடுபடுத்துவது தவறு.
-
ரவி
செய்தி:கோவை SBOA பள்ளி கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி மாணவர்களின் பெற்றோர் முற்றுகை போராட்டம்.
**
இது மாதிரி என்னிக்காச்சும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தச் சொல்லிப் போராடி இருக்கலாமே? மாணவர்களை ஒட்டு மொத்தமாக வேறு பள்ளிகளில் சேர்ப்பது தான் பள்ளி நிருவாகத்துக்குப் புகட்டும் சரியான பாடமாக இருக்கும். -
ரவி
தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தரும் சட்டம் போலி சமத்துவத்தைச் சுட்டுகிறதோ? தரமான, போதிய எண்ணிக்கையிலான அரசு பள்ளிகளைக் கட்டித் தந்தால் எதற்கு இந்தச் சட்டம்
-
புருனோ
இல்லை ரவி.
எத்தனை அரசு பள்ளிகள் என்றாலும் இந்த சட்டம் தேவை–
ஆனால் தற்சமயம் அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்துகிறார்கள் என்பது வருத்தப்படவேண்டிய விஷயம்
-
-
ரவி
குழந்தைகளிடம் கணினியைப் பறிகொடுப்பது எப்படி? பின்வரும் மென்பொருள்களை நிறுவிக் கொடுங்கள்:
TuxPaint, Tuxmath, TuxRacer, TuxType/, TuxPaint Stamps Installer, GCompris, ChildsPlay, Edubuntu (குழந்தைகள் கல்விக்கான லினக்சு வழங்கல்)
-
நாகு
குழந்தைகளிடம் இருந்து கணினியைக் காப்பது எப்படி என்று சொல்லவேண்டும்.

டக்ஸ்மேத் நிறுவிவிட்டு அதை மட்டும் விளையாடவேண்டும் என்று சொல்லிவிடுங்கள். -
ரவி
-
சங்கர் கணேஷ்
Edubuntu – http://edubuntu.org/
-
ரவி
நினைவூட்டியதற்கு நன்றி, சங்கர். Wubi மாதிரி edubuntuவுக்கு ஏதாச்சும் இருக்கா? இப்ப gcompris, childsplayம் சேர்த்திருக்கேன்.
-
சங்கர் கணேஷ்
Edubuntu தளத்துள தேடிப் பார்த்தேன்… Wubi இருக்கான்னு சரியா தெரியலையே!
-
கார்த்திக் 9:54 am on April 27, 2011 Permalink |
//அப்படியே வலுக்கட்டாயமாக வறிய மாணவர்களைச் சேர்த்தாலும், பள்ளி – ஆசிரியர்கள் – மற்ற மாணவர்கள் பாரபட்சமாக நடத்தக்கூடும்
இதை நினைத்து தான் மனம் வருந்துகிறது