The Dark Knight Rises
இணையத்தில் விமரிசனம் எழுதுகிறவர்கள் விட்டால் அடுத்த பாகத்தின் கதையையும் சேர்த்து எழுதி மண்டை காய வைப்பார்கள் என்பதால், உடனடியாக சீட்டு கிடைக்கும் வீட்டின் அருகிலேயே உள்ள இரண்டாம் தர திரையரங்கு ஒன்றுக்குச் சென்றோம். ஏற்கனவே அங்கு சென்றிருந்தபோது ஒலி, ஒளி சரியாக இல்லை. இம்முறை, முழுக்க கொசுக்கள் வேறு மண்டி இருந்தன.
படத்தின் துவக்கத்தில் நாட்டுப் பண்ணை ஒலிக்கும் வேடிக்கையான பழக்கம் இது போன்ற ஊரக / இரண்டாந்த திரையரங்குகளில் இருக்கும் போல. (தாய்லாந்துக்குப் போயிருந்த போது அங்கு மன்னரை வாழ்த்தும் பாட்டைப் போட்டார்கள்). தமிழக மீனவன் செத்தால் ஏன் என்று கேட்காத நாட்டுக்கு இது ஒரு கேடா என்று நான் உட்கார்ந்தே இருந்தேன். மற்ற எல்லாரும் எழுந்து நின்றதைப் பார்க்க எப்படி எல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்று தோன்றியது.
வெடிக்கப் போகும் அணு குண்டில் இருந்து வௌவால் மனிதன் மக்களைக் காப்பாற்றுவது தான் கதை. பாவம், மகேசு பாபு, ரசினிக்கு வந்த கதைப் பஞ்சம் போல அமெரிக்க மீ வீரர்களுக்கும் (Super Heroவை எப்படிச் சொல்லலாம்?) கதைப் பஞ்சம் போல.. எத்தனைப் படத்தில் தான் இதே கதையைக் காண்பது. எனக்கென்னவோ, இத்திரைப்படத்தின் முதல் பாகமான The Batman begins தான் ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு முறை பார்க்கலாம்.