உழுதவன் கணக்கு பார்த்தா…

அண்மைய நாட்களில் சில நண்பர்கள் கொஞ்சம் நிலம் வாங்கி புரட்சிகரமாய் உழவுத் தொழில் பார்க்கலாம் என நினைக்கிறார்கள். இன்றைய உழவர்கள் படும் துன்பங்களுக்கு அவர்கள் அறிவியல், தொழில்மேலாண்மை அடிப்படையில் செயல்படாததே காரணம் என பல நகரத்து அறிஞர்களும் நினைக்கிறார்கள். ஆனால், உழவர்கள் உண்மையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. வழிவழியாக இன்று வரையும் உழவு செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் நேரடி அறிவின் மூலமே இதைச் சொல்ல முடியும். :

1. கூலிக்கு வேலையாட்கள் கிடைப்பது இல்லை.

அனைவருக்கும் பள்ளிக் கல்விச் சென்று சேர்ந்ததால் படித்து நகரங்களுக்கு இடம் பெயர்பவர்கள், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களின் வளர்ச்சி, சிங்கப்பூர்-மலேசியா-அரபு நாடுகளுக்கு இடம் பெயர்பவர்கள் என்று இவர்கள் போக பெரும்பாலான ஊர்களில் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் மட்டுமே உள்ளனர். ஊர் மக்களின் சராசரி வருமானம் கூடி இருப்பதாலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களாலும், வயலில் வேலை பார்த்துத் தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நிலை இல்லை. நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்க்கும் பலருக்கும் தேவையான பணம் கிடைக்கிறது. அங்கு வேலையே செய்யாமல் பணம் கிடைப்பதால் உரிய கூலி கொடுத்தாலும் கூட வயலில் வேலை செய்ய தயங்குகிறார்கள். அப்படியே மரியாதை நிமித்தமாக வந்தாலும், வேலை செய்யும் நேரமும் தரமும் குறைவாகவும் ஏன் என்று கேட்டால் மீண்டும் வேலைக்கே வராமல் போகும் நிலையே உள்ளது. வேலையாள் பிரச்சினை காரணமாக எங்கள் மாவட்டம் முழுதும் கரும்பு உற்பத்தியே முற்றிலும் அற்றுப் போனது. இது போன்ற பணிகளுக்கு வேறு மாவடங்கள், மாநிலங்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவர்களையே ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து வேலை வாங்க வேண்டும். உரிய நேரத்தில் ஆள் கிடைக்காவிட்டால் பயிர் வீணாகப் போகும். மற்ற வேலைகளுக்குச் செல்லாமல் வயல் வேலைக்கு வரும் அளவுக்கு கூலி கூட்டித் தருவதற்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களின் விலை ஏறுவதில்லை.

இந்நிலையில் வேலையாள் அதிகம் தேவைப்படாத பயிர்களை இட வேண்டும். அல்லது, வீட்டில் உள்ள உறுப்பினர்களை வைத்தே பணிகளைச் செய்தாலே கட்டுப்படியாகும். வீட்டில் போதுமான உறுப்பினர்கள் இல்லாத நிலையில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி வேலை பார்க்கிறார்கள். சில வேளை, அறுவடை முடிந்த பின்பு கணக்குப் பார்த்தால், உழவு செய்வதற்குப் பதில் கூலி வேலைக்குச் சென்றாலே கூடுதல் பணம் கிடைக்கும் நிலையே உள்ளது.

2. விலைவாசி ஏற்றம்

கூலிச் செலவு, விதை, உரம், போக்குவரத்து என்று அனைத்துச் செலவுகளும் கடந்த பத்தாண்டுகளில் பல மடங்களு ஏறி உள்ளது. ஆனால், அதே அளவு உழவர்களுக்குக் கிடைக்கும் விலை ஏறவில்லை. உணவுப் பொருட்களின் விலை ஏறினாலும் அது இடைத்தரகர்களுக்கே செல்கிறது. நெல், கரும்பு, பால் போன்றவற்றின் சிறிதளவு நியாயமான விலை ஏற்றத்துக்குக் கூட போராட்டம் நடத்தியே பெற வேண்டி உள்ளது. உலகிலேயே தான் உற்பத்தி செய்யும் பொருளின் விலை மீது கட்டுப்பாடு இல்லாத ஒரே உற்பத்தியாளர்கள் உழவர்கள் தாம்.

3. நில வளம், நீர் வளம் குறைவு

கடந்த பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வேதி உரங்களைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் நில வளம் கெட்டுள்ளது. பருவ மாற்றங்களால் மழையை நம்பி இருக்க முடியாது உள்ளதால் ஆற்றுப் பாசனம் இல்லா பகுதிகளில் விளைச்சல் குறைகிறது.

4. நிதி ஆதாரம்

சரியான நேரத்தில் சரியான இடுபொருட்கள், பராமரிப்புகளைச் செய்வதற்குப் போதிய நிதி ஆதாரம் உழவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் கடன் வாங்கிச் செய்வதற்குள் பருவம் பொய்க்கும். அல்லது, உள்ளூர் வியாபாரியிடம் கடன் வாங்கி அவர்களிடமே விற்பது என்று ஒரு விசச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எளிமையான வாழ்க்கை இன்று இல்லை. மாறி வரும் நவீன நுகர்வோர் உலகின் தேவைகளுக்கு ஈடு கொடுப்பதாய் உழவுத் தொழிலின் வருமானம் இல்லை. எனவே, உழவுத் தொழிலைப் புறக்கணித்துப் பிற தொழில்களுக்கு நகர்கிறார்கள்.

பல குடும்பங்கள் காலம், காலமாக உழவில் இருந்ததால் அதை ஒரு தொழிலாக நினைக்காமல் கௌரவமாக நினைத்து விளை நிலை வெற்று நிலமாக இருப்பதைக் காணச் சகியாமல், உழவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. நிலம் பொய்க்கும் போது,கால்நடைகளை வைத்துப் பிழைப்போரும் பலர்.

அடுத்த தலைமுறையில் உழவு பார்க்க ஆள் இல்லாத காரணத்தால் நிலங்களை மனைகளுக்கு விற்போரும், பிற பெரிய நிலக்கிழார்களுக்கு விற்போரும், தென்னந்தோப்பு, சவுக்குக்காடாக மாற்றுவோருமே கூடி வருகின்றனர்.

அரசு பெரிய அளவில் கொள்கை மாற்றங்களைக் கொண்டு வந்து கவனிக்காவிட்டால், இந்திய வேளாண்மை பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறது என்பதே உண்மை. உழவு பொய்ப்பது பெரிய அளவு பண்பாட்டு, பொருளாதாரச் சிக்கல்களையும் கொண்டு வரும்.