Rural MBBS என்னும் பித்தலாட்டம்

பொறியியல் துறையில் ஒருவர் வேலை பார்க்க ஐ.டி.ஐ யிலோ பாலிடெக்னிக்கிலோ படிக்கலாம் அல்லது பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலை (BE / B Tech) படிக்கலாம். அதே போல் மருத்துவத்துறையிலும் பல படிப்புகள் உள்ளன

மருத்துவத்துறையில் வேலை பார்க்க என்ன படிப்புகள் உள்ளன

  • MNA / FNA : ஆன் செவிலிய உதவியாளர் / பெண் செவிலிய உதவியாளர் : 9 மாதம் முதல் ஒரு வருடம்
  • ANM / VHN : துனை செவிலிய மாது / கிராம சுகாதார செவிலியர் : 18 மாதம்
  • GNM : செவிலியர் (பட்டயம்) : 3 1/2 வருடம் ஆதாரம் : http://www.indiannursingcouncil.org/types-nursing-programs.asp
  • B.Sc Nursing : செவிலியர் (பட்டம்) : 4 வருடம் ஆதாரம் : http://www.indiannursingcouncil.org/types-nursing-programs.asp
  • B.Pharm : மருந்தாளுனர்  : 4 வருடம்
  • MBBS : மருத்துவ இளங்கலை : 5 1/2 முதல் ஆறு வருடம் (ஆடுமாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் படிப்பு ஐந்து வருடம்)

கிராமங்களில் காலியிடங்கள் உள்ளனவா

ஆமாம் இந்த செய்திக்குறிப்பில் உள்ளபடி

  • 8 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை.
  • அதே நேரம் 39 % ஆரம்ப சுகாதாரம் நிலையங்கள் ஆய்வக உதவியாளர் இல்லை.
  • மேலும் 17.7 சதவித நிலையங்களில் மருந்தாளுனர் இல்லை.
  • இது தவிர சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை மேலும் அதிகமாக உள்ளது  59.4% அறுவை சிகிச்சை நிபுணர்களின் பணியிடம் காலியாக உள்லது. 45% மகப்பேறு நிபுணர்களின் பணியிடங்கள், 61.1 % பொது மருத்துவ நிபுணர்களின் பணியிடங்கள், 53.8 % குழந்தை மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • மொத்தத்தில் சிறப்பு மருத்துவர்களின் மொத்த பணியிடங்களில் 70.2% சதம் காலியாக உள்ளது

காலியிடம் எங்கு அதிகம் உள்ளது

  • சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் தான் அதிகம் காலியிடம் உள்ளது

இதை எப்படி சரிசெய்வது

  • சிறப்பு மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதிகப்படுத்துவன் மூலம்

மருத்துவர் பணியிடங்களில் 8 சதம் காலியாக உள்ளதே. அதை எப்படி சரி செய்ய முடியும்

  • தேர்வாணையங்கள் மூலம் தேர்வு நடத்தினால், அந்த இடங்களுக்கு ஆட்களை நிரப்பலாம்.

மருத்துவர்கள் கிராமப்புறங்களில் வேலை செய்ய மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறதே

  • ஆதாரமில்லாத பொய் குற்றச்சாட்டு. தேர்வாணையத்தின் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு வேலை அளித்தால் அவர்கள் வேலையில் சேர தயாராகவே உள்ளனர்

கிராமப்புறங்களில் பணியாற்ற 3 வருடம் மட்டுமே படித்த மருத்துவர் போதுமா

  • நகர மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஆறு வருடம் படிக்க வேண்டும்
  • ஆடு மாடுகளுக்கு வைத்தியம் பார்க்க ஐந்து வருடம்
  • கிராம மக்களுக்கு என்றால் மூன்று வருடம் போதுமா

என்ன கொடுமை சார் இது (சந்திரமுகி பிரபு மாடுலேஷனில் வாசித்துக்கொள்ளவும்)

நகரத்தில் செவிலியர் வேலைக்கும் தேவைப்படும் நான்கு வருட படிப்பை விட கிராமத்தில் டாக்டர் வேலைக்கு குறைந்த படிப்பு போதுமென்று கூறுவது எவ்வளவு பெரிய அக்கிரமம்

கிராமங்களில் காலியிடங்கள் உள்ளனவே ? அதை நீங்கள் மறுக்கிறீர்களா

காலியிடங்களின் எண்ணிக்கையை மறுபடியும் பார்த்தீர்களா !! கிராமங்களில் மருத்துவர் காலியிடங்களை விட மருந்தாளுனர் மற்றும் ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் அதிகம் உள்ளனவே. மருத்துவத்துறை மட்டுமல்ல, எந்த துறை என்றாலும், அது பள்ளிக்கூடமாகட்டும், வருவாய்த்துறையாகட்டும், தொலைபேசி துறை, அஞ்சல் துறை, வங்கிகள் என்று எந்த துறை என்றாலும் எந்த பணியிடம் என்றாலும், நகரங்களை விட கிராமங்களில் காலியிடங்கள் அதிகமாகவே உள்ளன.

இந்த ஒரு காரணத்தை (காலியிடம்) வைத்து

  • நகர டாக்டர் : கிராம டாக்டர்
  • நகர பொறியாளர் : கிராம பொறியாளர்
  • நகர வங்கி ஊழியர் : கிராம வங்கி ஊழியர்

என்று அனைத்திலும் கிராம மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க முடியுமா ?? கிராம மக்களை இதை விட கேவலப்படுத்த முடியுமா

மருத்துவர்கள் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்வதாக குற்றச்சாட்டு உள்ளதே

மருத்துவர்களில் சிலர் வெளிநாடு செல்வது உண்மைதான். ஆனால் படித்து முடிப்பவர்களில் வெளிநாடு செல்பவர்களில் சதவிதம் மிக மிக குறைவு. சொல்லப்போனால் வெளிநாடு செல்லும் செவிலியர்களின் சதவீதத்தை விட வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் சதவீதம் குறைவுதான். சந்தேகம் இருந்தால் சம்மந்தப்பட்ட துறையில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் நீங்களே கேட்டு தெளிவு பெறலாம்.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய மருத்துவர்கள் உள்ளனர். செவிலியர்கள் இல்லை . ஆதாரம் : http://www.hindu.com/2010/02/22/stories/2010022255590700.htm

அடிப்படை சுகாதாரம், குடும்ப நலன், சிறுநோய் வைத்தியம் ஆகியவற்றை செய்ய மருத்துவ இளங்கலை MBBS படித்த மருத்துவர் தேவையில்லை என்பதால் தான் இந்த கிராமப்புற மருத்துவர் திட்டம் என்கிறார்களே

அடிப்படை சுகாதாரம், குடும்ப நலன், சிறுநோய் வைத்தியம் ஆகியவற்றை செய்ய மருத்துவ இளங்கலை MBBS படித்த மருத்துவர் தேவையில்லை என்பது சரியான கருத்து தான். அதற்கு கிராம சுகாதார செவிலியர்கள் / செவிலியர்களே போதுமானது.

அதாவது ஏற்கனவே பணியில் இருக்கும் கிராம சுகாதார செவிலியர்களே போதுமானது. அப்படி இருக்க ஏன் புதிதாக ஒரு படிப்பு என்பது தான் இங்கு பிரச்சனையே

இங்கு 9 மாதம் முதல் ஒரு வருடம் வரை படித்த செவிலிய உதவியாளர்கள் பலர் இருக்கிறார்கள். 18 மாதம் படித்த துனை செவிலிய மாதுகள், 18 மாதம் படித்த கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளனர். நான்கு வருடம் BSc Nursing படித்த ஏகப்பட்ட nurseகள் இருக்கிறார்கள். அவர்களை பணியில் அமர்த்தலாமே

ஏன் புது படிப்பு என்ற கேள்விக்கு யாரிடமாவது விடை உள்ளதா

நகர மக்களுக்கு முழு டாக்டர் கிராம மக்களுக்கு அரை டாக்டர் என்ற மாற்றந்தாய் திட்டத்தை வரவேற்பவர்களுக்கு கிராம மக்கள் மேல் என்ன விரோதம் என்று தெரியவில்லை

கிராம மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது

  • இது புதிய படிப்பு மட்டும் அல்ல
  • இது பாதி படிப்பு

கிராமப்புறங்கள் சாலை போடுவதற்கு ஒருவருடம் படித்த பொறியாளர் போதும் என்று யாராவது சொன்னால் உங்கள் கருத்து என்ன

கிராமப்புறங்களில் மின் விநியோகத்தை செயல்படுத்த ஒரு வருடம் படித்த பொறியாளர் போது என்றால் உங்கள் கருத்து என்ன

இன்றைய தேதியில் கிராமங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை. அங்கு மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

  • அதிகம் மருத்துவக்கல்லூரிகளை உருவாக்க வேண்டும்
  • இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் MBBS இடங்களை உருவாக்க வேண்டும்

அப்படி செய்ய அதிகம் பணம் செலவாகும் என்கிறார்களே. உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்த பணம் தேவையாமே

புதிதாக அரைவேற்காடு மருத்துவர்களை உருவாக்க ஆகும் பணம் தானே இங்கும் ஆகும். சொல்லப்போனால் அதை விட குறைவாகத்தான் ஆகும். அல்லது ஏற்கனவே இருக்கும் படிப்புகளான செவிலிய உதவியாளர், துனை செவிலிய மாது, கிராம சுகாதார செவிலியர், செவிலியர் ஆகிய படிப்புகளின் இடங்களை அதிகரிக்கலாம்.

நீங்கள் ஒரு தொழிற்சாலையில் தினமும் 100 வண்ன தொலைக்காட்சியும் 100 வானொலிகளும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை 200 வண்ண தொலைகாட்சிகளுடன் 100 வானொலிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற ஆகும் செலவு (100 வண்ண தொலைகாட்சிகளுடன் 200 வானொலிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற ஆகும் செலவு) அதிகமா, அல்லது 100 தொலைகாட்சிகள் மற்றும் 100 வானொலிகளுடன் மேலும் 100 கருப்பு வெள்ளை தொலைகாட்சிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற உள்கட்டமைப்பு வசதிகள அமைக்க ஆகும் செலவு அதிகமா

அது தான் பொறியியல் துறையில் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் எல்லாம் உள்ளனவே. பிறகு மருத்துவத்துறையில் மட்டும் மூன்று வருடம் என்றால் ஏன் எதிர்ப்பு

நல்ல கேள்வி ? ?

நீங்களே நன்றாக பாருங்கள். ஐடிஐயில் படிப்பவர்கள் பெறும் பட்டம் என்ன. கிராமப்புற பொறியாளர் Bachelor of Rural Engineering என்றா பட்டம் அளித்து நகரங்களுக்கு 4 வருடம் படித்த பொறியாளர், கிராமங்களுக்கு பொறியாளர் என்றால் இரண்டு வருடம் போதும் ஏன்றா சொல்கிறார்கள். இது வரை சொல்லவில்லை

ஆனால் இந்த Bachelor of Rural Medicine and Surgery அனுமதிக்கப்பட்டால், அனைத்து துறைகளிலும் (காலியிடங்கள் இருக்கும் அந்த சப்பை காரணத்தை காட்டி) இரு தரங்கள் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. அனைத்திலும் கிராம மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை தடுக்க முடியாது

இன்று படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் மருந்தாளுனர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என்று ஏகப்பட்டவர்களை நியமிக்காமல் ஒரு புது படிப்பு – அதிலும் இவர்களை விட தகுதி குறைவான ஒரு புது படிப்பு – தேவையா

சீனாவில் வெறுங்கால் மருத்துவர்கள் என்ற முறை உள்ளதாமே ??
சீனாவில் Barefoot doctors (chìjiǎo yīshēng) என்ற திட்டம் 1968ல் நடைமுறைப்படுத்தப்பட்டது உண்மை தான். ஆனால் அந்த திட்டம் 1981 நிறுத்தப்பட்டது !!

யார் இந்த வெறுங்கால் மருத்துவர்கள். இவர்கள் எத்தனை வருடம் படித்தார்கள்

அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் கல்லூரி சென்று படிக்கவில்லை. விவசாசியகளுக்கு குறைந்த பட்ச மருத்துவ மற்றும் முதலுதவி குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் அடிப்படை சுகாதாரம், மற்றும் குடும்ப நலன் மற்றும் சிறுநோய் சிகிச்சை மட்டுமே அளித்தார்கள்

இந்த திட்டத்தை இங்கு இந்தியாவில் நடைமுறைப்படுத்த ஏன் எதிர்க்கிறீர்கள்

இந்த திட்டம் - இதை விட நல்ல திட்டம் – ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது !! யாரும் எதிர்க்க வில்லை

கிராமங்களில் இருக்கும் அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் இதே பயிற்சி பெற்றவர்கள்தான். சொல்லப்போனால் கிராம சுகாதார செவிலியர்களின் பயிற்சி மற்றூம் பணியானது இந்த வெறுங்கால் மருத்துவர்களை விட் அதிகமானதே

தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் ஆஷா திட்டம் இந்த வெறுங்கால் மருத்துவர்கள் போன்றதே. மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டிகளை பார்கக்வும்

மருந்து அளிக்க (Prescribe செய்ய) மருத்துவர்கள் கட்டாயம் தேவையென்றும் செவிலியர்களுக்கு மருந்தை prescribe செய்ய உரிமையில்லை என்றும் அதனால் தான் இந்த புதிய அரைவேற்காடு படிப்பு ஆரம்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே

முழுப்பொய் !!

மருந்துக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றை ஒழுங்கு படுத்தி வெவ்வேறு பிரிவுகளாக வைத்துள்ளனர். இதில் சில மருந்துக்களை எந்த க்டையிலும் விற்கலாம். சில மருந்துக்களை மருந்து கடையில் மட்டுமே விற்க முடியும். மேலும் சில மருந்துபொருட்கள் மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே விற்க முடியும்.

சாதாரண மருந்துக்களை யார் வேண்டுமானாலும் அளிக்கலாம்.  எந்த வித படிப்பும் இல்லாத ஆஷாக்களே பல மருந்துக்களை நோயாளிகளுக்கு அளிக்க முடியும். 18 மாதம் படித்த கிராம சுகாதார செவிலியர்களே தடுப்பூசி போடுகிறார்கள்

BRMS படித்த ஒருவர் செய்யும் அனைத்து வேலைகளையும் தற்சமயம் ஏற்கனவே பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களும், செவிலியர்களும் செய்கிறார்கள் என்றால், பிறகு, தற்சமயம் செவிலியர்களின் படிப்பு காலமான 4 வருடத்தை விடு குறைவான காலத்திற்கு ஒரு புதிய படிப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கம் தான் என்ன

அது தான் திரும்ப திரும்ப கூறிவிட்டோமே. நகரத்தில் இருப்பவர்களுக்கு செவிலியராக இருக்க படிக்கும் அளவை விட குறைவாக படித்தாலே கிராமத்தில் இருப்பவர்களுக்கு டாக்டர் ஆகி விடலாம் என்று கிராம மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த தான்.

Related posts