இந்த மின்னஞ்சலைப் படித்து விட்டு உங்கள் …

இந்த மின்னஞ்சலைப் படித்து விட்டு உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தவறாது முன்தள்ளல் ( forward ) செய்க!

பெரியார் சிந்தனைகள் – இரண்டாம் பதிப்பு – முன்வெளியீட்டுத் திட்டம்

தோழர் வே. ஆனைமுத்து அவர்களால் தொகுக்கப்பெற்று 1974 இல் முதல் பதிப்பாக வெளிவந்த பெரியார் சிந்தனைகள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விரிவுபடுத்தப்பட்ட பதிப்பாக ஏறத்தாழ 9000 பக்கங்களுடன் 20 தொகுதிகளாக பிப்பிரவரி 2010- இல் வெளிவரவிருக்கிறது.

பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய மற்றும் முற்போக்குச் சிந்தனையுள்ள அனவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய அரிய கருத்துக் கருவூலம் இது.

பெயர்க்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி ஆகியவற்றோடு வெளிவருகிறது.

20 தொகுதிகள் ( 9000 பக்கங்கள் ) கொண்ட தொகுப்பின் விலை உருவா 5800. 31.12.2009 க்குள் தொகை அனுப்பி முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்வோருக்கு உருவா 3500 “periyar E.V.Ramasamy-Nagammai Educational Trust “ என ஆங்கிலத்திலோ அல்லது “பெரியார் இ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை ” எனத் தமிழிலோ வங்கி வரைவோலை பெற்று அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
வே. ஆனைமுத்து
தலைவர், பெரியார் நாகம்மை அறக்கட்டளை
19, முருகப்பா தெரு ( மாடி )
சேப்பாக்கம்
சென்னை – 600 005
தொலைபேசி 044 2852 2862
94448 04980

இது குறித்து பாமரன் அவர்கள் எழுதியுள்ளது

பச்சையாகச் சொன்னால் ஒருபுறம் வெட்கமாகவும் இருக்கிறது…… மறுபுறம் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கிறது. அந்த எண்பத்தி நான்கு வயது இளைஞரது ஓயாத உழைப்பைப் பார்க்கும்போது. தனது 19 ஆவது வயதில் பெரியாரைக் கண்டதில் இருந்து இன்று வரை அவரது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளையும், அவைகளை நடைமுறைப் படுத்துவதற்காக இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்களும் நம்மை மெய்யாகவுமே மெய்சிலிர்க்க வைப்பவை.
அந்த இளைஞர்தான் வே.ஆனைமுத்து. இயன்றவரையிலும் எந்த ஓட்டுக்கட்சிகளிடமும் தன் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அடகு வைக்காமல் பெரியாரது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பவர்தான் ஆனைமுத்து.
அவர் செய்த பணிகளிலேயே தலையானதாக நான் கருதுவது 1974 இல் வெளிவந்த ”பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” என்கிற அந்த மூன்று தொகுப்புகளைத்தான். நான் சிறுவனாக இருந்தபொழுது வந்த தொகுப்புகள் அவை.

தட்டச்சு செய்ய கம்ப்யூட்டர்களும், பலவண்ணங்களில் அச்சடிக்கும் ஆப்செட் மிஷின்களும் அறிமுகமாகாத காலகட்டம் அது. அவ்வளவு ஏன் நகலெடுக்கும்(அதாங்க ஜெராக்ஸ்) கருவிகளும் கூட வராத காலத்தில் பெரியாரது பேச்சுக்களையும், கட்டுரைகளையும் தொகுத்து மூன்று பெரிய வால்யூம்களாக கொண்டு வருவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன? அப்பணிகளுக்கு அன்று தோள் கொடுத்தவர்கள் அநேகம்பேர்.

இதோ….. இன்று அதே சிந்தனைகள் தொகுப்பு 35 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் மெருகூட்டப்பட்டு 9000 பக்கங்களில் இரண்டாம் பதிப்பாக நம் முன் தவழ இருக்கிறது. அதுவும் முதல் பதிப்பில் இடம் பெறாத எண்ணற்ற தகவல்களோடு. ஏறக்குறைய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெரியாரது கட்டுரைகள்….. பேச்சுக்கள்….. நேர்காணல்கள் என 20 தொகுப்புகளாக வருகிற பிப்ரவரியில் வெளிவருகிறது.

முன்பதிவுக்கான தொகை 3500 ரூபாய் என்பது நம்மைப் போன்ற தனி மனிதர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் இரண்டு மூன்று தோழர்கள் இணைந்து வாங்கினால் அது சாத்தியப்படக் கூடிய சமாச்சாரம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதையும் கூட ஓரிரு தவணைகளில் அளிக்கலாமாம்.

ஆனைமுத்து அவர்களிடம் பணபலம் எதுவும் இல்லை. ஆனால் நினைத்ததைச் சாதிக்கக் கூடிய மனபலம் இருக்கிறது. ”வரலாறு” என்பதில் வெறும் பானிப்பட்டுப் போர்கள் மட்டும் அடங்கியிருக்கவில்லை. அதில் நமது பாட்டன்…. முப்பாட்டன்களது போராட்டங்களும் அடங்கியிருக்கின்றன.
ஏனென்றால் வரலாற்றைப் படிப்பவர்கள் மட்டுமே வரலாற்றைப் படைப்பவர்களாக மாற முடியும்.
எனவே அழையுங்கள் : 094448 04980 உங்களின் அழைப்புக்காக ஆனைமுத்து அவர்களது அலைபேசி காத்திருக்கிறது.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மட்டுமே எழுதிப் பழகிய அந்த ஈரோட்டுக் கிழவனது போராட்டங்களால்தான் நம்மில் பலர் இன்று பட்டதாரிகளாகவும், பெரிய பெரிய பொறுப்புகளிலும் அமர்ந்திருக்க முடிகிறது.

அவன் அன்று கருப்புச்சட்டை போட்டிராவிட்டால் நம் தலைமுறை இன்று வெள்ளைச்சட்டை அணிந்திருக்க முடியாது. அந்தக் கிழவன் போராடியிருக்காவிட்டால் அன்று கூனிக்குறுகி கக்கத்தில் இடுக்கியிருந்த துண்டை நாம் இன்று நமது தோள்களுக்கு மாற்றி கம்பீரமாக நடை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

படிப்பறிவில்லாத பெரியார் அன்று போர் முரசு கொட்டாது இருந்திருந்தால் இன்று காதல் திருமணங்களும், சாதி மறுப்புத் திருமணங்களும், கைம்பெண்களது மறுமணங்களும் சாத்தியப்பட்டிருக்காது.

ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்தின் பின்னணியிலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது.
நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அப்படிச் சிந்தியவனின் வரலாற்றை வெளிக்கொணரும் முயற்சிக்குத் துணையாவது நிற்போம்.

December 15, 2009

Related posts