சம்பவம்.
இன்று ஒரு சந்திலிருந்து காரில் OMRக்குள் நுழையும் போது, முதல் வழிப்பாதையில் யாரோ அசந்தர்ப்பமாய் காரை ஏனோ நிறுத்தியிருந்தார்கள். மெதுவாக இன்னும் உள்ளே சாலையின் நடுவழியில் நுழைய நினைத்து, ஜாக்கிரதையாக காரின் மூக்கை மட்டும் சற்று திருப்பியிருந்தேன்; பின்னால் வரும் வாகனங்களை ரியர் கன்னாடியில் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஒரு இன்ச் கூட நடுவழிக்குள் நுழையவில்லை. எல்லோரும் இதை கவனித்து போக்கை அட்ஜஸ்ட் செய்துகொள்ள, வேகமாய் டூவீலரில் வந்த ஒரு அப்பாவி மட்டும், நேராக வந்து திகிலில் முன் ப்ரேக்கையும் சேர்த்து பிடித்து(என்று நினைக்கிறேன்) skidஆகி விழுந்தார். விழுந்ததற்கு என் செய்கை நிச்சயம் ஒரு காரணம்; சாலையில் வேறு ஒருவரும் கூட காரணம். ஆனால் விழுந்ததற்கான தவறு என்னுடையதல்ல என்றே நினைக்கிறேன்.
சில விநாடிகளில் பல டூவீலர்கள் ஒரு ஆட்டோ நிறுத்தப்ப்பட்டு என்னை அந்த சம்பவதற்கு முழு காரணமாக்கிவிட்டார்கள். என் காரில் ஒட்டியிருந்த Lபோர்டு வேறு வசதியாக போனது. ஒருவன் என் லைசென்ஸை காண்பிக்க கேட்டான். தனக்கு நன்றாக கார் ஒட்டத்தெரியும் என்று சொல்லிவிட்டு நான் செய்ததுதான் தப்பு என்றான். ”நான் இன்னும் ஒண்ணுமே செய்யவில்லையே” என்றேன். பின்னார் வந்த ஒருவன் நான் அந்த ஆளை தட்டிவிட்டதாக நினைத்து கத்தும் போது முன்னால் கத்தியவன் போய்விட்டிருந்தான்.
சிலர் (சம்பவத்திற்கு காரணமான காரும்) கிளம்பி போன பிறகுசில நிமிடங்களில் அங்கே இருந்தவர்களுக்கு நடந்ததே தெரியவில்லை. நானும் கத்தி கொண்டிருக்க ஒருவன் என் காரின் கதவை திறந்து ஓங்கி அடித்தான். அவனை அடிக்கும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டேன். நேரே அடிபட்ட ஆளிடம் (நகத்தில் மட்டும் ரத்தம்) போய் நான் சிகிச்சைக்காக அழைத்து செல்கிறேன். எதுவும் செய்ய தயராக இருக்கிறேன். என்னை நம்பி காரில் ஏறும்படி கேட்டேன். அப்போதுதான் அந்த ஆள் தவறு என் மேல் இல்லை என்றார். ̀யாரோ செய்த தப்பு இப்படியாகி விட்டது’ என்று அவர் சொன்னது எனக்கு இன்னமும் புரியவில்லை. (நான் முன்பே திட்டம் போட்டு இவ்வாறு செய்ததாக அவர் சொல்வாரோ என்கிற அளவுக்கு பயந்திருந்த நான்), அந்த ஆள் எனக்கு சாதகமாக பேச தொடங்கியவுடன், மற்றவர்களை தைரியமாக திட்ட தொடங்கினேன். “நாங்க பப்ளிக் எங்களுக்கு கேக்க உரிமை இருக்கு என்றான் ஒருவன். “அடிப்பட்ட ஆளே ஒண்ணும் சொல்லலை, உங்களுக்கு என்னய்யா மயிறு! என்ன நடந்ததுன்னாவது தெரியுமா?” என்று நான் கத்த, ஒருமையிலிருந்து முதன் முறையாக என்னை ̀ஸார்’ போட்டு பேசத்தொடங்கினான். பப்ளிக் எவ்வளவு பெரிய மொள்ளமாறி என்று நான் அவர்களை பார்த்தே கத்த துவங்கினேன். (அது சரி என்று இப்போது தோன்றவில்லை). இவ்வாறாக எனக்கு சாதகமகி விட்ட நிலமையில், சிகிச்சைக்கான என் அழைப்பை அடிபட்ட ஆள் ஏற்காமல் 200ரூபாய் மட்டும் வாங்கி கொள்ள, எனக்குள் இருந்த மன அலைக்கழிப்பை இங்கே எழுதுவதன் மூலம் கரைத்துக் கொள்கிறேன்.
ரோசா இந்த சீண்டல் தேவையா 1:45 am on November 11, 2009 Permalink |
****
(நான் முன்பே திட்டம் போட்டு இவ்வாறு செய்ததாக அவர் சொல்வாரோ என்கிற அளவுக்கு பயந்திருந்த நான்)
****
நல்லவேளை அவரது மூக்கு தப்பித்தது.
rozavasanth 6:46 pm on November 12, 2009 Permalink |
/நல்லவேளை அவரது மூக்கு தப்பித்தது./ ஆமாம், அதை விட அப்படி ஒரு சூழலில் தைரியமாக உண்மை பேசிய ஒருவரை முத்தமிடாமல் வந்து விட்டேனே என்று இப்போது வருந்துகிறேன்.